×

பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ டோக் பிசின் மொழியில் திருக்குறள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ மொழியான டோக் பிசினில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாள் பயணமாக சென்றுள்ளார். முதற்கட்டமாக ஜப்பானின் ஹிரோஷிமா சென்ற அவர் அங்கு நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்தார். தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவுகள் நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாடு நேற்று நடந்தது.

இதில் பிரதமர் மோடி பேசுகையில், என்னைப் பொறுத்தவரை, நீங்கள் சிறிய தீவு நாடுகள் அல்ல, பெரிய கடல் நாடுகள். இந்த பரந்த கடல்தான் இந்தியாவை உங்கள் அனைவருடனும் இணைக்கிறது. எப்போதும் உலகை ஒரே குடும்பமாகப் பார்ப்பதுதான் இந்தியாவின் தத்துவம். மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி, உங்கள் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, இந்தியாவை நம்பகமான பங்காளியாக நீங்கள் எண்ணலாம் என்றார். இந்த மாநாட்டின் இடையே, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக, பிரதமர் மோடியும், பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவும் இணைந்து, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான டோக் பிசினில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டனர்.

இந்நூலை, மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சுதீந்திரன் முத்துவேல் மற்றும் அவரது மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் இணைந்த மொழிபெயர்த்ததாகும். சுசீந்திரன் முத்துவேல் சிவகாசியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கடந்த 2012ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவின் முதல் இந்திய வம்சாவளி ஆளுநராக நியமிக்கப்பட்டார். திருக்குறள் மொழிபெயர்வு நூல் வெளியீடு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘பப்புவா நியூ கினியாவில், பிரதமர் ஜேம்ஸ் மாரப்பேவும் நானும் டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமையைப் பெற்றோம்.

திருக்குறள் என்பது பல்வேறு விஷயங்களில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு சின்னமான படைப்பு’ என தமிழில் டிவிட் செய்தார். திருக்குறளை டோக் பிசினில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல் மற்றும் அவரது மனைவிக்கு பாராட்டுக்களை மோடி தெரிவித்தார். பின்னர் பிரதமர் மோடி தனது பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

* பப்புவா, பிஜியின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பசிபிக் தீவு நாடுகளில் வசிக்காதவர்களுக்கான உயரிய விருதினை பப்புவா நியூ கினியா மற்றும் பிஜி நாடுகள் பிரதமர் மோடிக்கு நேற்று வழங்கி கவுரவித்தன. ‘கம்பேனியன் ஆப் ஆர்டர் ஆப் லோகோஹு’ விருதை என்ற விருதினை பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே வழங்கினார். இதே போல, ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ விருதினை பிஜியின் பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார்.

The post பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ டோக் பிசின் மொழியில் திருக்குறள்: பிரதமர் மோடி வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Papua New Guinea ,Port Morsby ,Bizin ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...